முதுமலை அருகே வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை
வனத்துறையினரை விரட்டிய யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சுமார் 5மணி நேரம் சிகிச்சை அளித்துவந்தனர். முதுமலை வனப்பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளை நோக்கி உலா வர தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு வந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், வனக் கால்நடை மருத்துவர்கள், யானையை பரிசோதனை செய்ததில்,
அது 6 வயதுடைய ஆண் காட்டு யானை என்பது தெரிய வந்நது. உடல் நலக்குறைவால் எழ முடியாமல் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதற்கு சிகிச்சை அளித்தனர். யானையின் மீது தண்ணீர் ஊற்றியும், அதற்கு மருந்துகள் கொடுத்தும், யானையை எழுப்பத் தீவிர முயற்சி மேற்கொண்டனர். சுமார் ஐந்து மணி நேர சிகிச்சையை தொடர்ந்து , காட்டு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத் துறையினரை துரத்தியது. இதனால் வனத்துறையினர் சிதறியடித்து ஓடினர்.
பின்னர் யானை வனப் பகுதிக்குள் சென்றது . வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.