கருணை கொலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்

கருணை கொலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்
கருணை கொலை செய்யக்கோரி மனு அளித்த பெண் 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன் என்பவரின் மனைவி அஸ்வினி (23). இவர் தனது கைக்குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தற்போது பனையபுரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் எனக்கும் பண்ருட்டி கணசம் பாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 4 வயதில் மகன் உள்ளான். பிறகு எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த என்னை பெரியதச்சூரை சேர்ந்த தேவநாதன் என்பர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். பிறகு புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியில் இருவரும் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு சுவாதி என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு ஒரு வயதாகிறது. இந்நிலையில் தேவநாதன், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு வருமானம் இல்லாமல் இருக்கிறார். அவர் குறிப்பிடும் செல்போன் எண்ணில் என்னை ஆபாசமான வார்த்தைகளில் பேசுமாறும் அதன் மூலம் பணம் கேட்டு வாங்குவதும் என்று எனக்கு தொல்லை கொடுத்தார். இதற்கு நான் உடன்படாததால் என்னையும் எனது குழந்தையையும் தேவநாதன் அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நான் நடந்த சம்பவத்தை தேவநாதனின் பெற்றோரிடமும் கூறினேன். அதற்கு அவர்கள் என்னை ஆபாசமாக பேசி சாதி பெயரை சொல்லி திட்டி கொலை செய்வதாக கூறி விரட்டி விட்டனர். தற்போது மீண்டும் நான் கர்ப்பமாக இருப்பதால் என்னையும், குழந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னையும், குழந்தைகளையும் கருணை கொலை செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அம்மனுவில் கூறியிருந்தார்.

Tags

Next Story