ஒரு வருடமே ஆன பாலம்... கன மழையால் போச்சு !

அரசகுடும்பன்பட்டியில் கன மழை காரணமாக கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமே ஆன பாலம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ,விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் உடைந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது..

இந்த நிலையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசகுடும்பன் பட்டி பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசால் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்ககூடிய பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக பாலம் வெள்ளத்தில் அடிக்கப்பட்டு முழுமையாக சேதம் அடைந்து பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனவும் இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்ககூடிய பொதுமக்கள் எந்த ஒரு பணிகளுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மாணவர்கள், பொதுமக்கள் கர்ப்பிணிகள் என அனைவரும் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய சூழலை உள்ளதாகவும் உடனடியாக பாலத்தை சீரமைத் தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story