மல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

மல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

கோப்பு படம் 

மல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி கிராமம் ஐயனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). தறித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக நிலவாரப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் செந்தில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே வாலிபர்கள் 2 பேர் பீரோவை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர் அக்கம் பக்கத்தினருடன் உதவியுடன் அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்தார். இதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு வாலிபரை பிடித்து பொதுமக்கள் மல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் மல்லூர் அம்பேத்கர் நகர் ஓட்டேரி காலனியை சேர்ந்த சஞ்சய் (19) என்பதும், அவரது நண்பனான தாதகாப்பட்டியை சேர்ந்த கோபால் (19) என்பவருடன் சேர்ந்து செந்தில் வீட்டில் திருட முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சஞ்சயை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story