காங்கேயம் அரசு பள்ளியில் ஆதார் பதிவு திட்டம்

காங்கேயம் அரசு பள்ளியில் ஆதார் பதிவு திட்டம் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 23.02.2024 அன்று கோவையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளான 10.6.24 அன்று இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வி துறை செயலர் அவர்களின் நேர்முக கடிதத்தின்படி , பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை ELCOT மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தொடங்கப்படுகிறது.

காங்கேயம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 86 பள்ளிகளில் 11,530 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 600 மாணவர்களுக்கு புதிதாக ஆதார் எண் பெற வேண்டி உள்ளது. மேலும் 2460 மாணவ மாணவியர்களுக்கு ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி உள்ளது. இவர்களுக்கான இந்த ஆதார் சேவைகளை நேரடியாக பள்ளியிலேயே வழங்கும் பொருட்டு இன்று காங்கேயம் ஒன்றியத்தில் காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்ட முகாமானது துவங்கப்பட்டது.

இம்முகாமினை காங்கேயம் நகராட்சி துணைத் தலைவர் திருமதி.கமலவேணி அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், காங்கேயம் வட்டார கல்வி அலுவலர் சுந்தரராஜன், காங்கேயம் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சிவகுமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நேரடி பயன் பரிமாற்றம் (DBT) முறையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும் ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால் இது பெற்றோர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story