சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா !
திருவிழா
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கோவிலில் திருப்பணிகள் நடந்ததால் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா எளிமையாக நடந்தது.
திருப்பணிகள் முடிந்து கடந்தாண்டு கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு ஆடித்திருவிழா வருகிற 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 24-ந் தேதி கொடியேற்றமும், 30-ந்தேதி கம்பம் நடுதலும், அடுத்த மாதம் ஆகஸ்டு 9-ந் தேதி வரை பொங்கல் வழிபாடு, உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.