நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக: அண்ணாமலை

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக: அண்ணாமலை

அண்ணாமலை

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியைக் கைவிடுக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில், மீனவ மக்கள், விவசாயிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், நகரைச் சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் பொதுமக்களும் வசித்து வருகின்றனர். நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை,

சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கில்,

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று, ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று, நமது பிரதமர் அவர்கள், காணொளி மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.

மருத்துவக் கல்லூரி என்பது புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காக, அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அன்றி, ஏற்கனவே பொதுமக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது அல்ல.

ஆனால், திமுக அரசு, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யும் முடிவில் இருந்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட பாஜகவினர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை முழுவதுமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து,

அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை, மருத்துவக் கிடங்காக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 17 அன்று போராட்டம் நடத்தினர். இதனால் திமுக அரசு தொடர்ந்த வழக்குகளை சட்டரீதியாக இன்றும் நாகை பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களும், நாகை அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 4 அன்று, ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர், பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையும் புறக்கணித்து, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும்,

நாகை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முழுமையாக மாற்றப்பட்டன. இதனால், நாகை நகரைச் சுற்றியிருக்கும் பல லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப், போதுமான பேருந்து வசதிகளோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு, 15 கிமீ தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது என்பது முற்றிலும் கடினமான ஒன்று. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டபோது, தஞ்சை மையப்பகுதியில் செயல்படும் இராசா மிரசுதார் அரசு மருத்துவமனை மாற்றப்படவோ, மூடப்படவோ இல்லை. அதே போல, திருச்சி, மதுரை, சேலம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியபோதும், அந்தந்த மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மாற்றப்படவோ, அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்படவோ இல்லை. ஆனால், அவசரகதியாக, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சி நடைபெறுவது,

திமுக அரசின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக செயல்பட்டு வந்த நாகப்பட்டினம் மாவட்டத் தலைமை மருத்துவமனையை, நாகப்பட்டினம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 4 லட்சம் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றியிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையிலேயே ஏற்கனவே இருந்த அனைத்து,

விதமான மருத்துவ சேவைகளும், தரமான கட்டமைப்புடன் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, திமுக அரசை, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

Tags

Next Story