தேர்தல் பறக்கும் படை அலுவலர் பணியிடை நீக்கம்!

தேர்தல் பறக்கும் படை அலுவலர் பணியிடை நீக்கம்!

தி.மு.க

தி.மு.க., நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா பயணித்த வாகனத்தை முறையாக சோதனை செய்யாததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பறக்கும் படை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்‌.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா‌ கடந்த 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பாளர் ஆ.ராசாவின் காரில் மாவட்டச் செயலாளர் முபாரக், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கோத்தகிரி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த வாகனத்தை கட்டப்பெட்டு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி ஆய்வு செய்தனர். பறக்கும் படை குழுவில் கோத்தகிரி குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் கீதா, எஸ்.எஸ்.ஐ., சிவராமன் ஆகியோர் இருந்தனர். தேர்தல் பறக்கும் படை குழுவினர் தி.மு.க., நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ‌.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாததாக வீடியோ வெளியானது. குறிப்பாக வாகனத்தின் பின்புறம் இருந்த கதவை மட்டும் திறந்து விட்டு பெட்டிகளை சோதனை செய்யவில்லை என்று கூறப்பட்டது. எனவே இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருணா விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் வழங்கினார். மேலும் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் அருணா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக பரிசோதிக்காதது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134 - யின் கீழ் கீதாவை நேற்று முதல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா உத்தரவிட்டு உள்ளார்‌. வேட்பாளரின் வாகன சோதனையின் போது பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., சிவராமன் 7 நாட்களுக்குள் விளக்கம் அளித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும். தேர்தல் பறக்கும் படை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story