ஊழல் வழக்கில் தலைமறைவான காண்ட்ராக்டர் கைது
ஊழல் வழக்கில் தலைமறைவான காண்ட்ராக்டர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அனந்தன் குளத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு தூர் வாரியதாக பொய் கணக்கு காட்டி அரசு பணம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 195 ரூபாயை கையாடல் செய்யப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் அப்போதைய உதவி செயற்பொறியாளர் மரிய அலோசியஸ், உதவி பொறியாளர் சுப்பிரமணிய பிள்ளை மற்றும் காண்ட்ராக்டர் ராஜகோபால் ஆகியோர் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் புகார் செய்து, நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 ஆயிரம் அபராதமும், காண்ட்ராக்டர் ராஜகோபாலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் 3 பேருக்கு தண்டனை உறுதி செய்தது. இந்த நிலையில் உதவி செயற்பொறியாளர் மரிய அலோசியஸ், உதவி பொறியாளர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் காண்ட்ராக்டர் ராஜகோபால் 6 மாதமாக தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு வந்த ராஜகோபாலை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.