பகுத்தறிவோடு சிந்திக்க கல்வி அறிவு மிகவும் முக்கியம்: ஆட்சியர்
மாணவர்களுடன் ஆட்சியர்
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி களப்பயணம் மேற்கொண்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கலந்துரையாடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (08.02.2024) ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டல்-கல்லூரி களப்பயணம் மேற்கொண்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கலந்துரையாடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பேசும்போது தெரிவிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன்கருதி பள்ளிகளின் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்திட இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நம் பள்ளி நம் பெருமை,
நான் முதல்வன் என்கிற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஒருவர் வாழ்க்கையில் கற்றுக்கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது.
அதனால்தான் கல்வி யாராலும் திருட முடியாத சொத்து என்கிறார்கள். மாணவர்கள் ஒருவர்கூட தவறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம். உயர்கல்வியை மாணவியர்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேமாதிரி அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கென தொழிற்கல்லூரியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. சிறிய வயதிலேயே கல்வியில் ஆர்வம் வந்துவிட்டால் உயர்கல்வியில் உன்னத இடத்தைப் பிடிக்க முடியும். அந்தவகையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை மேமப்படுத்தும் வகையிலும், உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலும் அருகில் உள்ள கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மீன்வளக்கல்லூரிகள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம், மீன்வள ஆராய்ச்சி நிலையங்களுக்கு கல்லூரி களப்பயணம் அழைத்து செல்லப்படுகிறார்கள். இக்களப்பயணத்தில் செல்லும் மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், பாடப்பிரிவுக்கு ஏற்றாற்போல் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்வார்கள்.
இதன்மூலம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இதற்காகவே தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நாள் கல்லூரி பயணம் அழைத்து செல்லப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பள்ளி ஒன்றுக்கு அதிகபட்சமாக 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு 1862 மாணவர்கள் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு இன்றைய தினம் களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தருவைக்குளம் மற்றும் வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று வரும் 70 மாணவர்கள் கல்லூரி களப்பயணம் மேற்கொண்டனர். இக்களப்பயணத்தில் மாணவர்கள் மீன் வளர்ப்பு முறை, மீன் பதப்படுத்துதல், மீன் அருங்காட்சியகம், மீன் பண்ணை, மீன் உணவு வகைகள் தயாரிக்கும் முறை, மீன்வளக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், மீன்வளத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவலை அறிந்துகொண்டனர்.
ஆகையால், 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் 12ம் வகுப்பு முடித்த பிறகு மேற்படிப்புக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இதில் குறிப்பாக மாணவிகள் மேற்படிப்பை தொடங்குவதற்கு ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். தங்களது மேற்படிப்பை விருப்பமுள்ள பாடங்களில் தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என்றும், உங்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) சுஜித்குமார், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.