நாமக்கல் நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் நகராட்சியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சுகாதார துறை சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்து உறுதி மொழியை வாசித்தார்..
நான் எனது வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களை போட மாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும, அவற்றை உடனே அகற்றி விடுவேன். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசு உருவாகாமல் பார்த்து கொள்வேன். அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என சுகாதார உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அலுவலர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி நம்மிடம் கூறுகையில் நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் உள்ள வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில், மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. கொசு புழுக்களை ஒழிக்கும் பணிகளில், நாமக்கல் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்குவை ஒழிப்பதில் நாமக்கல் நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.