தஞ்சாவூர் தொகுதியில் 13 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர் ஒய். கிகேட்டோ சேம, மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், கோட்டாட்சியர் செ. இலக்கியா ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக ச.முரசொலி, பாஜக கருப்பு எம். முருகானந்தம், தேமுதிக பெ.சிவநேசன், நாம் தமிழர் கட்சி எம்.ஐ. ஹூமாயூன் கபீர், பகுஜன் சமாஜ் கட்சி ஏ.ஜெயபால், சுயேச்சையாக போட்டியிடும் எம்.சரவணன், என்.செந்திகுமார், எழிலரசன், ஏ.சங்கர், சி.ரெங்கசாமி, எஸ்.கரிகாலச்சோழன், எஸ்.அர்ஜூன், எம்.சந்தோஷ் ஆகிய 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
மீதமிருந்த 23 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற, சனிக்கிழமை (மார்ச் 30) கடைசி நாள். பின்னர், மாலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.