காரை அலட்சியமாக ஓட்டியதால் சாலையோர குழியில் இறங்கி விபத்து
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பாவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்அலி மகன் ரபிக் அலி வயது 32. இவரது மனைவி இஸ்மத் பாத்திமா வயது 30. இவரது தாயார் ரஹமத் நிஷா. இவரது உறவினர் அப்துல் கலாம் வயது 29. அப்துல் கலாமின் மனைவி அட்ரின் வயது 23. இவர்கள் அனைவரும் இவர்களுக்கு சொந்தமான காரில் மார்ச் 31ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
இந்த காரை அப்துல் கலாம் ஓட்டிச் சென்றார். இவர்களது கார், அரவக்குறிச்சி அருகே உள்ள ரெங்கமலை பிரிவு அருகே சென்றபோது, காரை அலட்சியமாக செலுத்தியதால் சாலையோர பள்ளத்தில் காரின் சக்கரங்கள் இறங்கி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இஸ்மத் ஃபாத்திமா, அட்ரின், ரஹ்மத் நிஷா ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரபீக் அலி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அப்துல் கலாம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.