நாச்சியார் சத்திரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம்

நாச்சியார் சத்திரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம்

சேதமடைந்த தொட்டி

நாச்சியார் சத்திரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, நடுக்குத்தகை ஊராட்சி. கடந்த 1980ல் நாச்சியார் சத்திரம் 6வது தெருவில், ஆழ்துளை கிணறு மற்றும் 60,000 லி., கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நீர்த்தேக்க தொட்டியில் காரைகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதற்கு மாற்றாக, நாச்சியார் சத்திரம், வி.கே.நகரில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, 15வது மத்திய நிதிக்குழு மானியம், 'ஜல் ஜீவன்' திட்டம் 2020- - 21ம் திட்டத்தின் கீழ், 21.19 லட்சம் மதிப்பீட்டில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், பழைய நீர்த்தேக்க தொட்டியில், தொடர்ந்து நீர் ஏற்றப்படுவதால், நீர்த்தேக்க தொட்டி மேலும் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டி அருகே நாகவல்லி அம்மன் கோவில் அமைந்திருப்பதால், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வார்டு உறுப்பினரிடம் கேட்டபோது, 'தேர்தல் நடத்தை விதிமுறையால், திறப்பு விழா தள்ளி போனது. அவை விலக்கப்பட்டதால், விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

Tags

Next Story