கிழக்கு கடற்கரை சாலையில் தொடரும் விபத்துக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர்ப்பலி ஏற்படுவதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தினமும் கிழக்கு கடற்கரை சாலையான கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பல ஊர்களுக்கும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல் இந்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தருவைகுளம், வேப்பலோடை, குளத்தூர் பல பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் பெருமழை காரணமாக ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் வேப்பலோடை அருகே வைப்பார் செல்லும் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.
இதனை தற்காலிகமாக சரள் பரப்பி நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர். ஆனால் 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, இந்த கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.