அச்சிறுபாக்கம் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஆர்வம்
வெண்டை சாகுபடி
அச்சிறுபாக்கம் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஆர்வம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த ராமாபுரம், களத்துார், கீழ்அத்திவாக்கம், கிளியா நகர், ஓட்டக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அனைத்து விதமான தோட்டக்கலை பயிர்களுக்கும் ஏற்ற மண் அமைப்பு உள்ளது. பந்தல் பயிர்களான புடலங்காய், கோவைக்காய், பாகற்காய் மற்றும் பீர்க்கங்காய் வகைகளும், கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய் போன்ற காய்கறி பயிர்களும் சாகுபடி செய்ய, தற்போது விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோடை காலங்களில், நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள் சாகுபடியில் நல்ல மகசூல், கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் வெண்டை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். நன்செய், புன்செய் என, அனைத்து நிலப்பகுதியிலும் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. பருவ கால பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்த்து, வெண்டை சாகுபடி செய்ய, இப்பகுதி விவசாயிகள் துவங்கியுள்ளனர். தாம்பரம், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு, இப்பகுதியில் இருந்து, அதிக அளவில் காய்கறிகள் மொத்த விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
Next Story