அடுத்த குறைதீர் கூட்டத்திற்குள் நடவடிக்கை - ஆட்சியர் உத்தரவு

ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் பொதுமக்களின் மனுக்களுக்கு அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் தங்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடனும், அரசு அலுவலர்களின் மீது உள்ள நம்பிக்கையுடனும் உங்களிடம் வந்து கோரிக்கை மனுக்களை கொடுக்கக்கூடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சில அலுவலர்கள் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்களுக்கு வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது ஒரு மாதத்திற்கு மேல் நடவடிக்கை இல்லாமல் இருக்கும் மனுக்களின் மீது உரிய கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண வேண்டும் . உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் கோரிக்கை மனுக்களை வைத்திருக்கும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். . முதலமைச்சரின் தனி பிரிவிலிருந்து வரும் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் . என்றும், மேலும் உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம், அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story