அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

சுவரொட்டிகள் அகற்றம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் நகராட்சி சார்பில், மக்களுக்கான தூய்மை இயக்கத்தின் படி மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் நகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்களில் தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் திருக்கோவிலூா் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் ஆணையாளர் கீதா உத்தரவின் பேரில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர்.முன்னதாக பணியாளர்கள் தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சுவர்களில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா கூறுகையில் , திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் பள்ளி வளாகங்கள் மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. பள்ளி வளாகங்கள் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் ராட்சத பேனர்கள் வைக்க கூடாது, திருக்கோவிலூர் பகுதிகளில் நகராட்சி அனுமதியோடு நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பேனர்கள் 10'10. 10'15 என்ற அளவில் மட்டுமே வைக்க வேண்டும். அப்படி அனுமதியோடு அமைக்கப்படும் பேனர்கள் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும், நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்போர்கள் மீதும், அரசு அலுவலக கட்டடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story