பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்...!
தாமிரபரணி ஆற்றின் கரைகள் உடைப்பு குறித்து விசாரணை நடத்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம் தொடர்பாக பாரதிய கிஷான் சங்கத்தின் தமிழ் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநில செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சேதமான பகுதிகளை எங்களது குழுவினர் பார்வையிட்டனர். மிகவும் பாதிக்கப்பட்ட ஏரல் வட்டாரப் பகுதிகளில் பார்வையிட்டு, வெள்ளச் சேத மதிப்பை கணக்கிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ரூ.25ஆயிரம், வாழைக்கு ரூ.80ஆயிரம், வெற்றிலைக்கு ரூ.1லட்சம் வரை ஏக்கருக்கு கணக்கிட்டு அரசு வழங்க வேண்டும்.
வெள்ளத்தில் இறந்த ஆட்டுக்கு ரூ.5ஆயிரம், மாட்டுக்கு ரூ.30ஆயிரம், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். உப்பு தொழிலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், இன்சூரன்ஸ் குறித்து விவசாயிகளிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி 5 வருட பிரீமியத்தை அரசே கட்ட வேண்டும். பொதுப் பணித்துறையினர் கவனிக்கத் தவறியதால், தாமிரபரணி ஆற்றில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக விசாரணை நடத்தி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன், உதவி தலைவர் பார்த்த சாரதி, செயற்குழு உறுப்பினர் சீமான், அமைப்புச் செயலாளர் குமார், சேவா பாரதி மாநில துணைத் தலைவர் வென்னிமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.