கோவையில் கிரிகெட் மைதானம் அமைக்க நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை போல, கோவையில் அதிநவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் எக்ஸ் தள பதிவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதிக்கு பொறுப்பாக திமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா எக்ஸ் தளத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை விடுத்து இருந்ததார். அதில் கோவையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் பல்வேறு இளைஞர்களை சந்தித்தபோது அவர்களுக்கு விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தை காணமுடிந்தது எனவும், தடகளம், துப்பாக்கி சுடுதல், கார்பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங் மற்றும் குதிரையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருவதை பார்க்க முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிரிகெட் மீது இளைஞர்களின் மோகம் அதிகம் இருந்ததை காணமுடிந்ததாகவும், மேற்கு மண்டலத்தில் அதிக அளவில் தேசிய அளவில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்து இருந்த அவர். கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் திறமையான இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஒரு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். டி.ஆர்.பி ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த இரண்டு மணி நேரத்தில் தமிழக முதல்வர் மு.க்ஸ்டாலின் அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதில் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், 2024 தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன் எனவும் கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.கோவையில் அமைக்கப்படும் மைதானம் சென்னையின் அடையாளமாக இருக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக சார்பில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதில் கூடுதலாக கோவையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story