தஞ்சாவூரில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் 

சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூதலூர் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில், மருத்துவம் மற்றும் மக்கள்மா நல்வாழ்வுத்துறை சார்பில், பல்வேறு புதிய கட்டடங்கள் திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், திருவையாறு தொகுதி, ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலவாழ்வு மைய புதிய கட்டடமும், ரூ பேராவூரணி தொகுதி செருவாவிடுதி ஊராட்சியில், 50 லட்சம் மதிப்பில், வட்டார பொதுசுகாதார அலகு, கழனிக்கோட்டை ஊராட்சியில், ரூ.25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையமும், பட்டுக்கோட்டை தொகுதி பள்ளிகொண்டான் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்நது, தஞ்சாவூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மைய கட்டடமும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டட கட்டுமான பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்து வைக்கப்படும். அதேபோல் திருக்கானுர்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கான சிகிச்சை அளிக்கும் விதமாக தஞ்சாவூர்- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி ஊராட்சியில் ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அவசர கால தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதுடன் விபத்து ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான காலதாமதங்கள் தவிர்க்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மருந்தாக்கியல் துறை கட்டடமும், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நோயாளிகள் காத்திருப்பு அறையும், ரூ.33.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டண சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதேபோல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிய மகப்பேறு கட்டடமும் விரைவில் திறக்கப்படும் . இது போன்ற 31 பல்வேறு புதிய மருத்துவ கட்டடங்கள் ரூ.37.85 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில், ரூ.73.09 கோடி செலவில், 6 துணை சுகாதார நிலையங்கள், 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, ஓமியோபதி பிரிவு மற்றும் கூடுதல் பிரிவு மற்றும் 5 அரசு மருத்துவமனைகளில் (பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பூதலூர்) பல்வேறு மருத்துவ பிரிவுகள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவைத் தேடி மருத்துவம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜி நாதன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.கலைவாணி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் ச.அரங்கநாதன் (எ) கல்லணை செல்லக்கண்ணு, வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story