வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

வளையப்பட்டியில்  சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

 சிப்காட் தொழிற்சாலை 

ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கோரி நாமக்கல் மாவட்ட சிப்காட் ஆதரவு ஒருங்கிணைப்பு குழு மற்றும், விவசாயிகள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனுர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்று சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் தொழில் வளம் பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று கோ, நாமக்கல் மாவட்ட சிப்காட் ஆதரவு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த குழுவின் சார்பில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வழக்கறிஞர் ப.கைலாசம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். திரளான விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சிப்காட் ஆதரவு ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அம்மனுவில்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி என்.புதுப்பட்டி, அரூர், பரளி சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு எடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நிலம் கையகப்படுத்த துவங்கியுள்ள சமயத்தில் ஒரு சில சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து சிப்காட் எதிர்ப்பு குழு என்று அமைத்து அங்குள்ள கிரஷர் மற்றும் தோழிப் பண்ணையாளர்களிடமும் மற்றும் ஏழை விவசாயிகளிடமும் ஏக்கருக்கு சில ரூபாய் வீதம் வசூல் செய்து சிப்காட் தொழிற்பேட்டை வந்தால் தண்ணீர் மாசுபடும் நிலத்தடி நீர் கெட்டுவிடும், ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது, அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு குறைவான தொகையை கிடைக்கும் அப்படி தர வேண்டிய தொகையை அரசு முறையாக தராது, கஸ்தூரி மலைக்குச் செல்லும் பாதை மறிக்கப்படும் என பொய்யான பிரச்சாரம் செய்து விவசாயிகளையும் ஏழை, எளிய மக்களையும் ஏமாற்றி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தடை செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டருக்கு தண்ணீர் மாசுபடுத்தக்கூடிய எந்த விதமான தொழிலும் அமைக்க முடியாது. அத்தோடு சிப்காட் தொழிற்பேட்டை அமைய இருக்கும் கிராமங்களில் அதிகப்படியான விவசாயிகள் ஏழை எளிய மக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சிப்காட் அமைந்தால் அங்கு சுற்றி உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் தங்களது குடும்பத்தை விட்டு வெளியில் மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வருகிறார்கள். கஸ்தூரி மலைக்கு செல்லும் பாதையை தடை செய்ய மாட்டோம் என அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிப்காட் அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு நிலத்தடி நீர் மாசுபடக்கூடிய எந்த விதமான தொழிற்சாலையும் அமைக்க அரசு அனுமதிக்காது என்றும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தக்கூடிய எந்த தொழிற்சாலையும் அரசு அனுமதிக்காது என்றும் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் சிப்காட் தொழில் பேட்டைக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் குழுவை பற்றி பொருட்படுத்தாமல் அரசு போர்க்கால அடிப்படையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாயிகளும் ஏழை, எளிய மக்களும் விரும்புகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் ஜெயமணி கிரஷரின் உரிமையாளர் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு தானாகவே முன்வந்து தனக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தை கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே, மோகனூர் சுற்று வட்டார் பகுதியில் அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

துணைத் தலைவரும், லத்துவாடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான டி.மகேஷ்குமார், செயலாளர் பரளி ஏ.பொன்னரசு துணை செயலாளரும், என்.புதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சி.பூவராகவன், பொருளாளரும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான என்.வேலு பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story