பாட்டி கச்ச தீவை கொடுத்தார்;பேரன் காஷ்மீரை கொடுக்க முன்னோட்டம்: செந்தில்
நடிகர் செந்தில் வாக்கு சேகரிப்பு
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய முத்தனம் பாளையம் , முதலிபாளையம், பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமிகள் 4 1/2 ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது எனவும் , அப்போதுதான் மத்தியில் இருந்த பாஜக தமிழகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்ட பணிகளை கொடுத்ததாக குறிப்பிட்டார்.
எத்தனையோ பெற்றுக் கொண்டு தற்போது நம்மையே எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து கோவையில் நடைபெற்ற பரப்பரை பொதுக்கூட்டத்துக்கு வந்த ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு இனிப்பு கொடுத்த விவகாரத்தை விமர்சனம் செய்த நடிகர் செந்தில் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார் பேரன் காஷ்மீரை கொடுப்பதற்கு முன்னோட்டமாக நமது எதிர்க்கட்சிக்கு இனிப்பு வழங்கியிருப்பதாகவும் ,
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது எனவும் பேசினார். எல்லாருக்குமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக உங்களை வந்தடையும் எனவும்,
வட மாநிலங்களில் பாஜக வலுவாக இருப்பதால் 400 தொகுதி என்பது உறுதியாகி விட்டதாகவும் அதனால் மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த பரப்பரைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.