கோடநாடு வழக்கு விசாரணை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 நபர்களுள் வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகிய இருவர் மட்டுமே நேரில் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆஜராகினர். அதேபோல் எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் ஆஜராகினர்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த எஸ்டேட் பங்களாவில் நேற்று சி.பி.சி.ஐ.டி., காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் மூன்று துணை காண்காணிப்பாளர்கள், தடயவியல் நிபுணர்கள் உட்பட 15பேர் கொண்ட குழுவினர் மூன்று மணி நேரத்திற்கு மேல் கொள்ளை சம்பவம் நடந்த அறைகள் கொலை சம்பவம் நடந்ந நுழைவாயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க கால அவகாசம் கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்திரவிட்டார்.
