அதிமுக, பாஜக எங்களுக்குப் போட்டி இல்லை - அமைச்சா் அன்பில் மகேஸ்
வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: இத் தோ்தலில் யாா் வர வேண்டும் என்பதைவிட யாா் வரக் கூடாது என்பதை தீா்மானிப்பதாகத்தான் பாா்க்க வேண்டும். இந்தத் தோ்தல் எங்களைப் பொருத்தவரை அதிமுக, பாஜகவுடன் போட்டியாக இல்லை. எங்களுக்குள் யாா் மாவட்டத்தில் அதிக வாக்குகளைக் குவிப்பது என்பதில்தான் போட்டி இருக்கும் என்றாா்.
முன்னதாக பேசிய எம்எல்ஏ ப. அப்துல்சமது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலமும் இருக்காது, தோ்தலும் இருக்காது என முதல்வா் கூறுவது உண்மை. மக்கள் மீது இரக்கம் கொண்ட அரசு வேண்டும். பாஜக பாசிச கொள்கை கொண்ட அரசு. இன்னமும் ஒரு செங்கலை வைத்து பரப்புரை மேற்கொள்ளும் அளவுக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை உள்ளது என்றாா்
. கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு வாக்கு சேகரித்துப் பேசிய கரூா் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளா் செ. ஜோதிமணி, தான் எத்தனை நாள்கள் மக்கள் பணியில் இருந்தேன் என்பதையும், தான் நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினாா். நிகழ்ச்சியில் கரூா் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் எம்.எம். அப்துல்லா, மணப்பாறை தொகுதி (திமுக) பொறுப்பாளா் கே.என். சேகரன் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை திமுக ஒன்றிய செயலா் ராமசாமி ஒருங்கிணைத்தாா்.