ஊட்டியில் அ.தி.மு.க., பிரசாரம்!
உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என ஊட்டியில் நடிகை விந்தியா பிரசாரம் செய்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க .,வேட்பாளருக்கு லோகேஷ் தமிழ் செல்வனுக்கு ஆதரவாக துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா ஊட்டி ஏ.டி.சி., சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : தி.மு.க.,வும் பா.ஜ.க.,வும் தமிழ்நாட்டுக்கு எதையும் செய்ய மாட்டார்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணி ஜெயித்தால் ரூ. 500 க்கு சிலிண்டர் தருவதாக முதல்வர் கூறியுள்ளார். சிலிண்டர் கொடுப்பார்கள் ஆனால் அதனுள் எரிவாயு இருக்காது. ரூ. 75 க்கு பெட்ரோல் தருவார்கள் ஆனால் அதில் பாதி தான் தருவோம் எனக் கூறுவார்கள். அதேபோல் டீசல் தருவார்கள் தகுதி உள்ளவர்களுக்கு தான் தருவோம் என்பார்கள். தி.மு.க., வேட்பாளரும் பா.ஜ.க., வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நீலகிரி பக்கமே திரும்பிப் பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மட்டும் செங்கலை தூக்குவார். ஷூட்டிங் நேரத்தில் பெண்களை தூக்குவார், தவிர அவருக்கு அரசியல் தெரியாது. அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என கூறிவிட்டு தகுதி உள்ள மகளிருக்கு மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம். பா.ஜ.க., எதற்கெடுத்தாலும் ரோடு ஷோ நடத்துகிறார்கள் இதை அண்ணாமலை பெருமையாக பேசி கொள்கிறார்.
ஆட்டுக்கார அலமேலு என்ற ஒரு படம் வந்தது அதில் ஒரு ஆடு நடித்திருக்கும் அதை தமிழகம் முழுவதும் சுற்றிக்கொண்டு ரோடு ஷோ நடத்தினார்கள் அதுபோல் அண்ணாமலையை வைத்து தற்போது பா.ஜ.க., ரோடு ஷோவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். "தி.மு.க., திராவிட மாடல் என ஏமாற்றும் " "பா.ஜ.க., இந்திய மாடல் என ஏமாற்றும்" தி.மு.க., கடவுளைத் திட்டிக் கொண்டே சாமி கும்பிடும்", "பா.ஜ.க., கடவுளே திட்டும் அளவிற்கு சாமி கும்பிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். .....