பாஜக நிர்வாகி வீட்டில் அதிமுக வேட்பாளர் பணம் பறிமுதல்

காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாஜக நிர்வாகி வீட்டில் ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.31.74 லட்சத்தை பறிமுதல் செய்து வருமான‌ வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பிஜேபி கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைத்திருப்பதாக திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌

அதன் அடிப்படையில் வெள்ளகோவிலுள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடு முழுக்க உள்ள அலமாரி, உள்பக்க அறைகள் மற்றும் வீட்டை சுற்றி தேடியதில் வீட்டின் உள்பக்க அறையில் வைத்திருந்த ஆவணங்கள் இல்லாத சுமார் ரூ. 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம்‌ என்பதும், அசோக்குமார், ஜவஹர்குமாரின் நண்பர் என்பதால் வெள்ளகோவில் பகுதிகளில் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் ஜவஹர் தெரிவித்தார் .

மேலும் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமா என்ற சந்தேகத்துடன் போலிசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைத்தினர் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை எண்ணப்பட்டு‌ வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவஹர் தரப்பில் தெரிவித்ததாவது: எனது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் வீட்டிலிருந்து இரண்டு வருட காலமாக எங்கள் பகுதியில் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 28 லட்சம் ரொக்க பணத்தையும், எனது சொந்த செலவிற்காக வைத்திருந்த சுமார் 3.5 லட்சம் ரொக்க பணத்தையும் முறையற்ற பணம் என கருதி எனது வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தொகை கடந்த இரண்டு வருட காலமாக கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் எனவும், மேலும் இந்த பணத்திற்கும் வருகின்ற தேர்தலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என எழுத்துப்பூர்வமான கடிதத்தை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story