குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக தமிழ்நாடு ஸ்டாலினிடம் சிக்கியுள்ளது

தமிழகத்தில் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக தமிழ்நாடு ஸ்டாலினிடம் சிக்கித் தவிக்கிறது என ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பேசினார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் செயல் வீரர்கள் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை கழக அமைப்புச் செயலாளர் செம்மலை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றி பேசினார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கையில்:-:-இந்த தேர்தலை பொருத்தவரையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. எடப்பாடியார் அறிவித்துள்ள சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறோம். தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும், நாங்கள்தான் வெற்றி பெறுவோம். ஆனால் நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கள்ள உறவு இருப்பதாக சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். இனிமேல் எங்களுக்கும் தேசிய கட்சியான பாஜகவிற்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் இன்னும் நாங்கள் உறவோடு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அது உண்மை அல்ல. மக்களை குழப்புவதற்காக அப்படி சொல்கிறார். இன்றைய சூழலில் அரசியல் எதிரியாக திமுகவை பார்க்கின்றோம். கொள்கை எதிரியாக பாஜகவை பார்க்கிறோம் இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் முதலாவதாக அரசியல் எதிரியான மக்கள் விரோத கட்சியான திமுகவைத்தான் நாங்கள் குறிவைப்போம்.

அதற்குப் பிறகு தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பாஜகவை எதிர்கொள்வோம். தேசியக் கட்சியான பாஜக என்கிற முதலை மீது சவாரி செய்தோம். அதன் ஆபத்தை உணர்ந்து தற்போது வெளியில் வந்து விட்டோம். ஆனால் நமக்கு பல்வேறு உரிமைகளை பறித்த, நிதிநிலை மோசமாக இருப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதலையின் முதுகிலே ஸ்டாலின் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவர்களாலே எதிர்காலத்திலே ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது. எனவே முதலை மீது உட்கார்ந்து கொண்டிருக்கின்ற அந்த குரங்கு கையிலே சிக்கித் தவிக்கிற பூமாலையாகத்தான் தமிழ்நாடு ஸ்டாலின் கையில் சிக்கி தவிக்கிறது. குரங்கிடமிருந்து பூமாலையை நாங்கள் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்த தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர் வியூகம் வகுத்துள்ளார்.

நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த ஆதரவை தருவார்கள். வெற்றி பெற்றவுடன் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இழந்த உரிமைகளை மீட்கவும், இனி இழக்காமல் இருப்பதற்கும் குரல் கொடுப்பார்கள். கழகம் என்பது எடப்பாடியார் இருக்கின்ற கழகம் தான் உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை சின்னம் எடப்பாடியாரின் தலைமையிலான கழகத்திற்கு தான் சொந்தம் என்று தீர்ப்பாகி விட்ட பிறகு திரும்பத் திரும்ப அரைத்த மாவையே பன்னீர்செல்வம் அறைத்து வருகிறார். இயக்கத்திற்கு எதிரிகளாக கூட அவர்களை நாங்கள் பார்க்கவில்லை துரோகிகளாக பார்க்கிறோம்.

அவர்கள் செய்கின்ற துரோகம் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் தேமுதிக பாமக போன்ற கட்சிகளுக்கு சின்னம் அங்கீகாரம் பெற்று தந்தது அம்மா தான். ஒரு சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லாதவர்களுக்கு எப்படி தேர்தல் ஆணையம் அவர்கள் கேட்ட சின்னத்தை வழங்க முடியும். எனவே தேர்தல் ஆணையம் இதில் தவறு செய்வதாக நாங்கள் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தாமரை. ராஜேந்திரன், கடலூர் மாவட்ட செயலாளர்கள் அருன்மொழித் தேவன், பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ஜெயலிங்கம் உள்ளிட்ட அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story