பா.ஜ‌.க., பிரசார வாகனத்தில் அ.தி.முக கொடி

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனின் பிரசார வாகனத்தில் மாட்டப்பட்டிருந்த அ.தி.மு.க., கொடி, உடனடியாக அகற்றப்பட்டது.

மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க., நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று முதல் பிரசாரம் செய்கிறார். ஊட்டி மாரியம்மன் கோவிலில் வழிபட்ட அவர் பிரசார வாகனத்தில் ஏறினார். அவருடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட பலர் இருந்தனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் இருந்த பிரசார வேனின் முன்புறம் தே.மு.தி.க., த.ம.க., அ.ம.மு.க., பா.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

அதில் அறிஞர் அண்ணா முகம் பொரித்த அ.தி.மு.க., கொடியும் இருந்தது. மத்திய இணை அமைச்சர் பிரசார வாகனத்தில் அ.தி.மு.க., கொடி இருந்ததால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க., கொடி பிரசார வேன் தயாரிக்கப்பட்ட போது தவறுதலாக வைக்கப்பட்டதா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினரா என்று விவாதம் ஏற்பட்டது. இதை கவனித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அ.தி.மு.க., கொடியை உடனடியாக அகற்றுமாறு கூறியதையடுத்து, கொடி அகற்றப்பட்டது.

Tags

Next Story