அண்ணாமலை பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்
கோவை அருகே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து, அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
சூலூர் அருகே தேர்தல் பரப்புரையின் போது பாஜகவின் பிரச்சார வாகனம் ஒன்று அதிமுகவின் பிரச்சார வேனை உரசி சென்ற நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் மாநில நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.