சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகியின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி !
அ.தி.மு.க. நிர்வாகி
சேலத்தில் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று இரவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் சண்முகத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதை கண்ட தொண்டர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாயினர். தொடர்ந்து சண்முகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சண்முகம் கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நெஞ்சை பதற வைக்கிற இந்த கொலைக்கு காரணமான 55-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து கைது செய்யப்பட வேண்டும். கொலையுண்ட சண்முகம் குடும்பத்தை கொடியவர்கள் நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். விடியா தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து கொலை நடந்து வருவதாக நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன்.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்பது போல் நடக்கிறது. சண்முகத்தை கொலை செய்தவர்கள் அந்த பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதாகவும், அதோடு லாட்டரி சீட்டு விற்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இப்படி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்களை காவல்துறையில் சண்முகம் புகார் செய்த காரணத்தினால் பொறுத்து கொள்ள முடியாதவர்கள் அவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.