அ.தி.மு.க. போராட்டம் தொடர்பான சுவரொட்டியால் பரபரப்பு: 2 பேர் கைது

 அ.தி.மு.க. போராட்டம் தொடர்பான சுவரொட்டியால் பரபரப்பு: 2 பேர் கைது

காவல் நிலையம் முன்பு திரண்ட அதிமுகவினர்

நாகர்கோவிலில்அதிமுக போராட்ட சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.

மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதிமுக நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story