அ.தி.மு.க.,வினர் திடீர் ஆதரவு - காஞ்சி மேயர் பதவி தப்புமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மஹாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கான இடத்தை கைப்பற்றுவதில், தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், அக்., 5ம் தேதிக்கு பின், டிச., 6ல் மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், ஒரு தரப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேயருடன் சேர்த்து 13 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்காததால், தீர்மானங்கள் நிறைவேறவில்லை. இதனால், மேயர் மஹாலட்சுமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அக்கூட்டத்திற்கு 17 கவுன்சிலர்கள் வந்துள்ளதாக கூறி, அதற்கான வருகை பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், 13 தி.மு.க., கவுன்சிலர்களுடன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வரும் 5ம் தேதி, மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிருப்தியில் உள்ள 20 தி.மு.க., கவுன்சிலர்கள், இக்கூட்டத்திற்கு பெரும்பான்மை இல்லாத நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.