கலப்பட மதுபானம்: 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்
கைது செய்யப்பட்டவர்
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சிஜோ ஜான்(39) என்பவரை கடந்த மாதம் 14ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்ற செயலில் ஈடுபட்ட சிஜோ ஜான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவரது உத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளியான சிஜோ ஜான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுவரை கலப்பட மதுபானம் தயாரித்த 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.