மண்வளம் காக்க மகத்தான தொழில்நுட்பங்கள் - வேளாண் துறை விளக்கம்
கோப்பு படம்
மண் வளம் காக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "
மண்ணின் வளத்தை பேணிக் காக்க வேண்டுமெனில், ஒவ்வொரு விவசாயியும் தனது விளைநிலத்தின் மண்ணை அவசியம் மண் பரிசோதனை செய்யவேண்டும். மண்ணில் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல்சத்து தவிர மண்ணில் உள்ள நுண் சத்துக்களின் அளவையும் கண்டறிதல் அவசியமாகும். மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிடல் வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் தனது வயல் முழுவதும் நடந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
மண்வெட்டிகொண்டு மண்ணை வெட்டி உற்று நோக்கினால் மண்புழு இருப்பதின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய நிலம் வளமான மண் என்பதை அறியலாம். வயலில் உள்ள மேல்மண்ணை ஏர் கலப்பை கொண்டோ அல்லது களைக்கொட்டு கொண்டோ அதிகம் கிளறாமல் இருப்பதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன், இந்நுண்ணுயிர்களால் 30 விழுக்காடு மண்ணின் மேல்பரப்பில் தழைச்சத்து நிலைநிறுத்தப்படுகிறது. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல் நெல், உளுந்து நிலக்கடலை, எள், சோயாபீன்ஸ் போன்ற பயிர்களை மறுசுழற்சி முறையில்
பயிரிடுவதன் மூலம், மண்ணில் உள்ள சத்துக்கள் நிலைப்படுத்தப்படுவதுடன் மண்ணில் அங்ககச் சத்து மேம்படுத்தப்படுகின்றது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. அங்ககத் தன்மை அதிகரிக்கும்போது மண்ணில் காற்றோட்டம் மற்றும் மண்ணில் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கின்றது. மூடுபயிர்களாக பயறுவகை பயிர்களை பயிடுவதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
மண்ணில் உள்ள சத்துக்கள் விரையம் ஆவது தடுக்கப்படுகிறது. மணற்பாங்கான நிலங்களில் தண்ணீர் அடித்துச் செல்வது தடுக்கப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதலின் அளவு குறைகின்றது. நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகின்றன.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகள் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகள் மண்வளத்துடன் நேரிடையாக தொடர்புடையவை ஆகும். நன்மை செய்யும் பூச்சியினை அதிகப்படுத்தும் நோக்கில் வண்ண மலர்கள் தரும் சாமந்திப்பூ, சூரியகாந்தி மற்றும் வெண்டை போன்ற பயிர்களை வரப்புகளில் பயிரிடவேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை கட்டுக்குள் வைத்திட முடிந்தவரை பூச்சிமருந்து உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி உழுதல் வேண்டும். நடவு வயலில் எருக்கு, கொளிஞ்சி, கிளரிசிடியா போன்ற பசுந்தழை உரங்களை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
நெல், உளுந்து, எள், நிலக்கடலை போன்ற பயிர்களின் கழிவுகளை மண்ணிலேயே இட்டு மடக்கி உழுவு செய்தல் மூலமும் மண்ணின் அங்ககச் சத்தை அதிகரிக்கலாம். வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் திரவ வடிவிலான உயர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா,
ரைசோபியம் போன்ற திரவ உயிர் உரங்களை நேரடியாக நடவு வயலில் இடுவதன் மூலம் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை மண்ணில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மண் வளத்தினை மேம்படுத்தலாம்.
ஆகவே, விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட அனைத்து தொழில் நுட்பங்களையும் பின்பற்றி மண்வளத்தினை பேணிக் காத்திடலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.