திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாரத் டெக்ஸ் எக்ஸ்போவில் கலந்து கொள்ள ஏஇபிசி அழைப்பு.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாரத் டெக்ஸ் எக்ஸ்போவில் கலந்துகொள்ள ஏஇபிசி தென் மண்டல பொறுப்பாளர் பப்பிஸ்சக்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாரத் டெக்ஸ் எக்ஸ்போவில் கலந்து கொள்ள ஏ.இ.பி.சி. அழைப்பு. திருப்பூர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென்னிந்திய பொறுப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய ஜவுளி அமைச்சகம் பாரத் டெக்ஸ் எக்ஸ்போ 2024 என்ற உலகின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சியை வரும் பிப்ரவரி 26 முதல் 29 வரை டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியானது இந்திய ஜவுளி ஏற்றுமதி மற்றும் நமது இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் மாபெரும் கண்காட்சியாகும். நீண்ட காலமாக உலகளாவிய தரநிலை மற்றும் அளவோடு பொருந்தக்கூடிய ஒரு சர்வதேச கண்காட்சி நமது நாட்டில் இல்லை என்ற குறையை போக்கும் விதமாக இந்த கண்காட்சி அமையப்பெறும்.
இந்திய ஜவுளித் துறையில் தனது வலிமையை இந்தக் கண்காட்சியின் மூலம் நமது ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. ஜவுளி வர்த்தகத்தில் உண்மையான திறனை உலகிற்கு உணர்த்தும் வகையில் பாரத் டெக்ஸ் இருக்கும். நீண்ட காலமாக இருந்து வரும் பிராண்டிங் மற்றும் பொசிஷனிங் அடிப்படையில் இந்தியாவுக்கு உரிய இடத்தை இந்த கண்காட்சியானது உறுதி செய்யும். இது சம்பந்தமாக ஏஇபிசி பாரத் டெக்ஸ் எக்ஸ்போ-2024 ஐ அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் விளம்பர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் ஏஇபிசி ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் துபாயில் போன்ற வெளிநாடுகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. கண்காட்சியில் பங்கேற்பது குறித்து வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து பெரும் உற்சாகமும் எழுந்துள்ளது.
இத்தருணத்தில் பாரத் டெக்ஸ்-2024 ஐ ஊக்குவித்து, இதன் முக்கியத்துவத்தை வெளிநாட்டு வர்த்தகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வரும் வெளிநாடுகளில் உள்ள நமது இந்திய தூதரகங்களின் முழு பங்கை எடுத்துரைப்பது இத்தருணத்தில் மிகவும் முக்கியமானது மற்றும் பாராட்டுக்குரியதாகும். பின்னலாடை ஏற்றுமதியில் இந்திய அளவில் திருப்பூர் 55 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நிலையான உற்பத்தி மற்றும் இலக்குகளை நோக்கிய முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கென்று தனியாக திருப்பூர் நிட்வேர் பெவிலியன் என்று ஏற்படுத்துமாறு கேட்டுள்ளோம்.
எனவே ஏற்றுமதியாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும், பாரத் டெக்ஸ் எக்ஸ்போவில் பங்கேற்பவர்களில் ஒருவராகவும் புதிய தொடர்புகள் மற்றும் புதிய வணிக விசாரணைகள் பெற இந்த கண்காட்சியில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -------