தாய் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது சடலத்தை வீட்டில் வைத்து சடங்கு செய்த மகன் தற்கொலை
தாய் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது சடலத்தை வீட்டில் வைத்து சடங்கு செய்த மகன் தற்கொலை
பெரம்பலூரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது சடலத்தை நடு வீட்டில் வைத்து சடங்குகளை செய்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் விரிவாக்கப் பகுதியான கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம்குமார்(34). காரைக்குடியை பூர்வி பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தனது 70 வயது தாயாருடன் வசித்து வருவதாகவும், தற்பொழுது இருக்கும் வீட்டில் கடந்த ஓர் ஆண்டாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றார். இந்நிலையில் அவரது தாயார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்ததாகவும் புகைப்பட கலைஞரான இவர் நாள்தோறும் திருச்சிக்கு வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் ஆகாத நிலையில் தாயாரை கவனித்து வந்த ஸ்ரீராம்குமாருக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது தாயர் உயிரிழந்த சம்பவம் பேரிடியாகி போனது. இதனை தொடர்ந்து தனது தாயாரின் உடலை தான் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டின் நடுவில் கிடத்திய ஸ்ரீராம்குமார், சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அவர் மேல் துணியை போர்த்தி பூஜை பொருட்கள், தர்ப்பை போன்றவற்றை வைத்து வணங்கி உள்ளார். இதனை தொடர்ந்து வீட்டின்அனைத்து பகுதிகளையும் உட்புறமாக பூட்டிய, ஸ்ரீராம்குமார் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அதிக அளவில் பழகாத இவர்கள் கடந்த 10 தினங்களாக வெளியில் நடமாட வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டின் உள்ளே இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்ரீராம் குமாரும் அவரது தாயார் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் நகர போலீசார் இரண்டு உடல்களையும் அதே இடத்தில் வைத்து அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும் அவர்கள் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை என்றும். அவர்களது உறவினர்கள் யார் என்பது தெரியவில்லை என்பதாலும், இவர்களது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாலும் போலீசார் இந்த முடிவினை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தினால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
Next Story