நீலகிரியில் கண்காட்சி முடிந்தும் குறையாத நுழைவு கட்டணம்
நீலகிரி ரோஜா பூங்கா
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் கோடை விழாவையொட்டி 19-வது ரோஜா கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி யானைகள், காட்டுமாடு, மான், நீலகிரி வரையாடு,
புலி உள்பட பல்வேறு உருவங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ரோஜா கண்காட்சி 66 ஆயிரத்து 334 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வழக்கமான நாட்களில் ரோஜா பூங்கா நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.25, பெரியவர்களுக்கு ரூ. 50 வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் கண்காட்சியையொட்டி சிறியவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100 என இரட்டிப்பு செய்து வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் ரோஜா கண்காட்சி முடிந்த பிறகும் இன்று, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், கண்காட்சிக்காக கூடுதலாக வசூலித்த கட்டணத்தை தொடர்ந்துள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், "ரோஜா கண்காட்சி நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. ரோஜா கண்காட்சி நீட்டிப்பு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் கட்டணத்தை குறைக்காமல் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம். உடனடியாக கட்டணத்தை குறைக்க வேண்டும்," என்றனர். இதுகுறித்து ரோஜா பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில்,
ரோஜா கண்காட்சி பொதுமக்களை அதிகளவில் கவர்ந்தது. ரோஜா அலங்காரங்கள் அடுத்த 3 நாட்களுக்கு தொடரப்படும், இதனால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, என்றனர்.