சேலம் அம்பாள் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை
ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட தாதகாப்பட்டி கேட் பகுதியில் அம்பாள் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழைக்காலங்களில் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் இருந்து மழைநீர் காஞ்சிநகர், எம்.ஜி.ஆர். நகர் ஓடை வழியாக அம்பாள் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலக்கட்டத்தில் ஏரி நிரம்பி காணப்படும் போது அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்பட்டது.
இதனிடையே நீர்வரும் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழைநீர் இந்த ஏரிக்கு வருவது குறைந்தது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியின் பரப்பளவு குறைந்துவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. ஏரியில் தண்ணீர் ஆங்காங்கே மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. குறிப்பாக இந்த ஏரியை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இது ஏரி தானா? அல்லது ஆகாயத்தாமரையின் வளரிடமா? என்று எண்ண தோன்றுகிறது.
இந்த ஏரியை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் சீராக ஏரிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் பிரதமர் மோடியின் அம்ரித் பாரத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.90 லட்சத்தில் ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், தெருவிளக்கு அமைத்தல், கிரானைட் கற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.