ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரி வாக்குவாதம்

நான் பஞ்சாயத்து தலைவர் என் ஊர்ல என்ன கேட்காம ஆக்கிரமிப்பை அகற்றும் வேலை செய்றீங்க அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பஞ்சாயத்து தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆரிமுத்துமோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்முண்டி சர்க்கரை ஆலை எதிரே நெடுஞ்சாலையோரம் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்ற வந்துள்ளனர். இதையறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிலும் குறிப்பாக ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் நான் தான் பஞ்சாயத்து தலைவர்; என் ஊரில் என்னை கேட்காமல் ஆக்கிரமிப்பை அகற்றும் வேலையை செய்கிறீர்கள் என்று ஆவேசமாக பேசினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி குமரேசன் ஊராட்சி தலைவர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு நாட்கள் கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


Tags

Next Story