இழப்பீடு கேட்டு போராட்டம் - காங்கிரஸ் எம் எல் ஏ-க்கள் பங்கேற்பு
கடந்த 2010ம் ஆண்டில் தங்க நாற்கர சாலை திட்டத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்க நாற்கர சாலை திட்டத்துக்காக கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நிலம் கடந்த 2010-ல் கையகப்படுத்தப் பட்டது. இதில் குன்னத்தூர் உட்பட சில வருவாய் கிராமங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்திய இதைக் குறித்து கவலைப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் இந்த ரோடு வேலை புதிதாக எடுத்த ஒப்பந்தக்காரர் வேலை துவங்குவதற்காக காப்புக்காடு தாழவிளைப் பகுதியில் வந்துள்ளார். இதை அறிந்த ஊர் மக்கள் 100க்கும் மேற்பட்டவர் ஒன்று சேர்ந்து அவர்கள் பணி துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் தலைமையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ, பிரின்ஸ் எம்.எல்.ஏ, முன்சிறை கிழக்கு வட்டார காங் தலைவர் ரகுபதி, உட்பட நூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரிடம் எம்எல்ஏக்கள் எங்களை கைது செய்த பின்னர்தான் இந்த பணி துவங்க முடியும் என கூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். முடிவில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பு மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story