வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்க பயிற்சி
விளக்க பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனொரு பகுதியாக அணைக்காடு கிராமத்தில், மாணவிகள் செயல்விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக நிலக்கடலையினை விதைத்துள்ளனர். இதில், திரட்சியில்லாத பொக்குகடலைகள் அதிகளவு உருவாகின்றன. அதனை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலக்கடலை ரிச் எனப்படும் பயிர் ஊக்கி உபயோகிக்கலாம் என்பது பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், அதனைப் பயன்படுத்தும் முறைப்பற்றியும், வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினர். மேலும், அதனை பயன்படுத்துவதால் பயிர் ஊக்கம் பெற்று வளர்வதுடன், திரட்சியான கடலைப் பயிர் உருவாகும் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு, மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் அக்கிராம விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயன்பெற்றனர்.