ஈச்சங்கோட்டையில் விதைப்பு பணியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மாணவிகள் பட்டுக்கோட்டை பகுதியில், கிராமத் தங்கல் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனொரு பகுதியாக அணைக்காடு கிராமத்தில் உள்ள விவசாயி தி இசைக்கல் வேதநாயகத்தை சந்தித்த கல்லூரி மாணவிகள், அவர் தன் வயலில் பயிரிடும் நெல், கடலை மற்றும் எள்ளின் விதைப்பு முறைகள் மற்றும் சாகுபடி குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டனர். இசைக்கல் வேதநாயகம் கடந்த ஆண்டு தனது 6 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து 15,120 கிலோ விளைச்சல் எடுத்தார்.
அது மட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் (2022-2023) அதிக மகசூல் பெற்ற விவசாயி என்ற பட்டத்துடன் வெற்றி பெற்று ரூ.15,000 பரிசுத் தொகையும் பெற்றவர். அவர் வயலில் கடலை மற்றும் எள் விதைப்பு நடைபெற்றது.
மாணவிகள் களத்தில் இறங்கி நுண்ணுயிர் கொண்டு, விதை சிகிச்சை செய்த கடலை விதைகளை, கடலை விதைக்கும் கருவி மூலம் தென்னை மரத்திற்கு இடையில் ஊடுபயிராக விதைத்து கள அனுபவம் பெற்றனர். மேலும், எள் விதையை நெல் சாகுபடிக்கு பின்பு உழாமல் மண்ணில் இருக்கும் நீரை கொண்டு நேரடியாக தூவும் விதைப்பு முறையை கண்டனர். அதன்பின், மாணவிகளும் வயலில் இறங்கி விதைத்தனர்.