தங்கப்ப உடையான்பட்டியில் வேளாண் கண்காட்சி

தஞ்சாவூர் ஆர்.வி.ஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சார்பில் தங்கப்ப உடையான்பட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், ஆர்.வி.ஸ் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் சர்க்கரை ஆலை அருகே உள்ள தங்கப்ப உடையான்பட்டி கிராமத்தில், கல்லூரி, மாணவிகள் சார்பில் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் தங்கப்ப உடையான்பட்டி விவசாயிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கண்டு களித்தனர். இக்கண்காட்சியில் தழைக்கூளம், சுற்றுச்சூழல் பொறியியல், நிலக்கடலை உடைக்கும் கருவி, நாணல் புல் படுக்கை அமைப்பு, பன்றி விரட்டி, விளக்குப் பொறி, திருந்திய நெல் சாகுபடி, திரவ உயிர் உரங்கள் மற்றும் பூச்சிப்பொறி அமைப்பு போன்ற மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது மேலும், விவசாயிகளுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் விளங்கும் வகையில் வரைபடங்கள் மற்றும் மாதிரிகளைக் கொண்டு விளக்கப்பட்டது.

இதில், விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி கலந்து கொண்டார். மேலும், இயற்கை வேளாண் முறைகள் குறித்து மாணவிகள் நேரடி செயல்விளக்கம் அளித்தனர். ரசாயனங்கள் பயன்பாட்டை குறைத்து, அங்கக வேளாண்மையை பின்பற்றுவதால், குறைந்த செலவில், அதிக மகசூல் பெறுவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என எடுத்துரைத்தனர். மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, மாணவிகள் விளக்கமளித்தனர். நிறைவாக இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story