டேங்கர் லாரி மூலம் விவசாய பணிகள் - இன்சூரன்ஸ் தொகை வழங்க கோரிக்கை
நெற்பயிர்களுக்கு டேங்கர் லாரியில் தண்ணீர்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை, இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. இந்த பகுதியில் இரண்டு வகையான நெல் ரகங்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஜோதி ரக நெல் விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். சுமார் 1000 ஏக்கர் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் தற்போது கருகி வருகிறது.
மேலும் இப்பகுதியில் விவசாயிகளின் சாப்பாட்டிற்கு பயிரிட்டுள்ள ஆர்.என்.ஆர் நெல் ரகங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்த தண்ணீர் லாரி ஒரு டேங்க்ர் ரூ.500க்கு வாங்குகின்றனர். ஒரு ஏக்கருக்கு நெற் பயிர்களை 25 டேங்க் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். ஏற்கனவே உழவு , விதைப்பு பணி, உரம், மருந்து தெளிப்பது, களை எடுப்பு பணி உள்ளிட்ட வேலை சேர்த்து சுமார் ரூ.25000 க்கு மேல் செலவு செய்துள்ளனர். தற்போது இந்த டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதால் விவசாயிகளுக்கு மேலும் செலவு அதிகரித்து வருகிறது. ஆனாலும் அனைத்து விவசாயிகளும் இந்த டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. இந்த பகுதியில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.