பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 
X

ஆர்ப்பாட்டம் 

நூறுநாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும். அனைவருக்கும் ஜாப் கார்டு வழங்க வேண்டும். இலவச வீடு கட்ட வழங்கிடும் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பேராவூரணி பகுதியில் குடிமனைப் பட்டா கேட்டு வழங்கப்பட்ட மனுக்களுக்கும், சாலை, பொதுப்பணித்துறை குளங்களில் குடியிருக்கும் மக்களுக்கும் உடனடியாக குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தை பேராவூரணி நகர் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித் தொகைகள் மூன்றாண்டு காலமாக வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர்கள் எம்.சித்திரவேலு (பேராவூரணி), பி.கே. சண்முகம் (சேதுபாவாசத்திரம்) விவசாயத் தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றியத் தலைவர் பி.ஏ.கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கருப்பையா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.ராஜமாணிக்கம், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சின்னதம்பி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார். இதில் கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story