இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை அட்வைஸ்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, "பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 6,200 எக்டேர் சம்பா மற்றும் தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், துவரங்குறிச்சி மற்றும் சூரப்பள்ளம் கிராமங்களில் நிரந்தரப் பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றங்களால் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இவை நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு, அவற்றில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதினால், இலைகள் வெள்ளை நிறமாக மாறி இலைகள் காய்ந்து விடுகிறது.
இதன் தாக்குதல் வயல் ஓரங்களிலும், அதிக தழைச்சத்து யூரியா உரம் இட்ட பகுதிகளிலும் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதலை கட்டுப்படுத்திட வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழை சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவு மேல் இடாமல், தேவையான அளவை மூன்று முதல் நான்கு முறையாக பிரித்து இட வேண்டும். விளக்கு பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டு தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரம்மா கைலானிஸ் ஏக்கருக்கு 2 சிசி அளவு நடவு செய்த வயலில் விட்டு முட்டை குவியலை அழிக்கலாம். மூன்று அடி உயரம் கொண்ட குச்சிகளை பறவை குடில்களாக அமைத்து தாய் பூச்சிகளை பறவைகள் பிடித்து உண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது" எனத் தெரிவித்துள்ளார்.