தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை அறிவுறுத்தல்
தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, மதுக்கூர் வட்டாரத்தில் முன் பட்ட குறுவை இளம் பயிர்கள் பூக்கும் பருவத்திலும், உளுந்து, நிலக் கடலை பயிர்கள் அறுவடை நிலையிலும் உள்ளது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள பயிர்களை சுற்றி தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். இந்த பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகள் மிக முக்கியமாகும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியில் வெள்ளை ஈக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூஞ்சை கொசுக்கள், மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் தாய்ப்பூச்சிகளை எளிதில் கவர்ந்து, அடுத்த கட்ட இனப்பெருக்கத்தை தவிர்த்து பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இருப்பதால் சுற்றுச்சூழல், மண், நீர், காற்று ஆகியன பாதுகாக்கப்படுகிறது. ஒட்டு பொறியின் இருபுறமும் பசை இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தத்துப் பூச்சிகள், பழ ஈக்கள், மற்றும் இலை சுருட்டுப் பூச்சிகள், வெள்ளை ஈக்கள், கொசுக்கள், புகையான்கள் போன்றவைகளை மிக எளிதாக பிடித்து அழிக்கிறது. ஒட்டுப் பொறிகளை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பயிர்களின் வளர்ச்சி பருவம் மற்றும் கதிர் கொடுக்கும் தருணங்களில் ஏக்கருக்கு 10 ஒட்டுப் பொறிகள் வீதம் பயன்படுத்தினால் தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பயிர்களை நாம் பாதுகாத்து பலனடையலாம். இதுபற்றி கூடுதலாக விவரம் அறிய வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை மேம்படுத்தலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.