கோடை உழவு செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை
பைல் படம்
தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொ) அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி தரிசாக உள்ள நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடிதத்தன்மை அகற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெய்யும் மழை அந்தந்த நிலத்திலேயே சேகரிக்கப்பட்டு ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.
மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட வயலாக இருந்தால் முன் பருவத்தில் படைப்புழு பாதிப்பு ஏற்பட்டு புழுக்கள் கூட்டுப்புழுகளாக மாற்றமடைந்து மண்ணில் புதைந்திருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் இக்கூட்டுப்புழுகள் நிலத்தில் இருந்து வெளிக்கொணரப்பட்டு பறவைகள் மற்றும் அதிக வெப்பத்தினால் அழிக்கப்படுகிறது. அதேபோல் முந்தைய பயிர் சாகுபடிக்கு பிறகு வயலில் தேங்கியுள்ள கழிவுகள் மண்ணுக்குள் புதைந்து மக்கி உரமாக மாறி புதிய பயிருக்கு ஊட்டத்தை தருகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.