விவசாய அமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பட்டணங்கால்வாய் பகுதிக்கு 12 நாட்கள் தண்ணீர் விநியோகிப்பதாக உறுதி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் பிப்ரவரி 29ந் தேதி தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பட்டணம் கால்வாய் கடைமடை பகுதியில் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. பட்டணங்கால்வாய் பகுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று கருங்கல் அருகே பாலூரில் உள்ள பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவு அலுவலகத்தில் மிடாலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர், மற்றும் விவசாய அமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுப்பணித்துறையினர் மற்றும் குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி பிரவீன் கெளதம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரவில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள குமரி பொதுப்பணித்துறை நீர்ஆதார அலவலகத்தில் செயற்பொறியாளர் ஜோதிபாசு தலைமையில் விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கோபால் கலந்துகொண்டனர். அப்போது, பேச்சிப்பாறையில் இருந்து பெருஞ்சாணி வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பாசன கால்வாயில் தூர்வாருவதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளதாகவும், இன்று முதல் பேச்சிப்பாறை பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரப்படுவதால், தூர்வாரி முடித்ததும் தண்ணீர் பேச்சிப்பாறையில் இருந்து பட்டணங்கால்வாய்க்கு தண்ணீர் வினியோகிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். ஆனால் வருகிற 27ந் தேதி முதல் ஏப்ரல் 7ந் தேதி வரை 12 நாட்களுக்கு தொடர்ந்து பட்டணங்கால்வாயில் தண்ணீர் விடவேண்டும் என விவசாய பிரதிநிதிகள் கூறினர். இதை பரிசீலனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story